உளவள ஆலோசனை

15/06/2012 14:30

 

உளவள ஆலோசனை

 

முஸ்லிம்கள் நிலத்தை இழப்பதைவிட உள்ளத்தை இழப்பதே ஆபத்தானது.
சுனாமி அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன, மத பேதங்கள் எல்லைகளைக் கடந்து எமது நாட்டு மக்கள் உதவிப்பணிகளில் முடிந்தவரை ஈடுபட்டார்கள். இவ்வாறான பணிகளில் பாதிக்கப்பட்ட மக்களின் மனோ நிலையை ஆற்றுப்படுத்தும் செயற்றிட்டங்களும் பலதரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டன. எமது சமூகத் தரப்பிலிருந்து ஈடுபட்டவர்களுள் ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளரும் நாடறிந்த இஸ்லாமிய அறிஞருமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் (நளீமி) முதன்மையானவர். இஸ்லாமிய நோக்கில் உளவள ஆலோசனை என்ற தலைப்பில் அவருடன் எங்கள் தேசம் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டது.

எங்கள் தேசம்: சுனாமி பற்றிய உங்களுடைய பார்வை?

அகார் முஹம்மத்: கடந்த மாதம் இலங்கையையும் ஏனைய நாடுகளையும் பாதித்த சுனாமி இன்றுவரைக்கும் மக்களிடையே பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையில் சுனாமி அனர்த்தம் தொடர்பில் முக்கியமாக மூன்று நோக்குகள் இருக்கின்றன.

முதலாவது, சிலர் இதனை இயற்கை அனர்த்தமே தவிர மதங்கள், மத அறிஞர்கள் குறிப்பிடுவது போன்று இது இறை தண்டனையோ, இறைவனின் சோதனையோ அல்ல எனக் கருதுகின்றனர். இரண்டாவது, சிலர் இதனை தண்டனைதான் என உறுதியாகக் கூறுகின்றனர். மூன்றாவது, இது இறைவனால் விதிக்கப்பட்ட சோதனை. இது அல்லாஹ்வுக்கு மாற்றமாக நடந்தவர்களுக்கு தண்டனையாகவும், நல்லவர்களாக இருந்து உயிரிழந்தவர்களுக்கு ஷஹாதத்தாகவும் ஏனைய மக்களுக்கு படிப்பினையாகவும் அமைகிறது என்று கருதுகின்றனர். மூன்றாவது கருத்துடன்தான் நானும் உடன்படுகிறேன்.

எங்கள் தேசம்: உளவளத்துணை, உளவள ஆலோசனை, ஆற்றுப்படுத்தல் என்பதை எவ்வாறு சுருக்கமாக வகைப்படுத்தலாம்?

அகார் முஹம்மத்: இது தொடர்பில் முக்கியமாக மூன்று வகையீடுகள் இருக்கின்றன.
1. உளவளத்துணை என்னும்போது தனிப்பட்ட ஒருவர் தன்னுடைய பிரச்சினை, துன்பம் என்பவற்றைத் தானே தீர்த்துக்கொள்ள இன்னுமொருவர் உதவும் நடவடிக்கை.
2. அசாதாரண நிலையிலிருக்கும் பாதிக்கப்பட்ட ஒருவருடைய மனோநிலையை சாதாரண மனோநிலைக்கு கொண்டுவருவதற்காக வழிகாட்டும் செயற்திட்டம்.
3. பிரச்சினையுடன் வரும் ஒருவரை ஏற்றுக்கொண்டு, அவரை மதித்து அவருடைய பிரச்சினையைப் பற்றி விசாரித்து அதனை இனங்கண்டு, அவரோடு உரையாடிய அமைப்பிலேயே அவருக்கான படிமுறை அமைப்பில் பயிற்சி வழங்குதல். இவைதான் உளவளத்துணை என்பதற்கு சுருக்கமாக வழங்கப்படுகின்ற வரைவிலக்கணங்களாகும்.

எங்கள் தேசம்: மதத்திற்கும்,(ஆன்மிகம்) உளவளத் துணைக்குமிடையே தொடர்பு இருக்கிறதா?

அகார் முஹம்மத்: உண்மையில் நான் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சில இடங்களில் உளவள ஆலோசனை தொடர்பாக இடம்பெற்ற பல்வேறு கலந்துரையாடல், ஆலோசனை அமர்வுகளில் கலந்துகொண்டபோது பலர் என்னிடம் கேட்ட கேள்விகளுள் இதுவும் ஒன்று அதாவது மார்க்கம் வேறு உளவளத்துணை வேறு என்ற கருத்திலேயே கேள்விகளை முன்வைத்தனர். உண்மையில் நவீன காலத்திலேயே உளவியல்துறை பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டிருப்பது உண்மைதான். எனினும், உளவளத்துணைக்கும் மதத்திற்கும் தொடர்பில்லை என்ற கருத்தை ஏற்க முடியாது. உண்மையான உளவளப் பயிற்சி என்பது ஆன்மிகத்துறையையும் இணைத்ததாக செயற்படுகின்ற போதே பூரணமான வெற்றியையும், விளைவையும் தரும். கிறிஸ்தவரான டேல் கானேச் என்ற பிரபலமான மனவள ஆலோசகர் தன்னுடைய How to stop worry and start living”, “How to influence people and win friends என்ற நூற்களில் அவருடைய பல்வேறு அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். இதில் அவர் கூறும் உறுதியான கருத்து உளவளத்துணை எப்போது ஆன்மீகத்துடன் சேர்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றதோ அப்போதுதான் அதனுடைய உண்மையான முடிவைக் காணலாம் என்பதாகும். அவ்வாறே வில்லியம் ஜேம்ஸ் என்ற உளவள ஆலோசகரும் இக்கருத்தை குறிப்பிட்டிருக்கிறார். நோபல் பரிசுபெற்ற புகழ்பெற்ற மருத்துவர் அலெக்ஸ் காரல் Man the unknown என்ற நூலில் மனிதன் தனக்கு ஏற்படுகின்ற துன்பம், கஷ்டம், பிரச்சினைகள் என்பவற்றிலிருந்து நிரந்தரமான தீர்வைப் பெற வேண்டும் எனில் நிச்சயமாக அவனுக்கு ஆன்மிக வழிகாட்டல்கள் கொடுக்கப்பட வேண்டும். அப்போது மட்டுமே இதனுடைய உண்மையான நன்மையை அவனுக்கு அனுபவிக்கக்கூடியதாக இருக்கும். ஆகவே மதத்திற்கும், உளவளத்துணைக்கும் தொடர்பில்லை என்பதை ஏற்க முடியாது. இறை நம்பிக்கையின் அடிப்படையாக வழங்கப்படுகின்ற உளவளத்துறைதான் உண்மையான வெற்றியைத் தரும்.

எங்கள் தேசம்: இஸ்லாம் மனிதனுடைய உடம்பை விட உள்ளத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது யதார்த்தமானது. இதுபற்றி?

அகார் முஹம்மத்: இஸ்லாத்தின் பார்வையில் மனிதன் பிரதானமாக இரண்டு கூறுகளைக் கொண்டவன். உள்ளம், உடல், என்பனவே அவை. இதனை இன்னுமொரு வார்த்தையில் சொல்வதாயின் மனிதன் சூட்சும உடலையும் (Spritual body), பௌதிக உடலையும் (Physical body) கொண்டவன். இதில் அவனுடைய வாழ்க்கையின் ஓட்டமும், வெற்றியும் சூட்சும உடலின் ஆரோக்கியத்தில்தான் தங்கியிருக்கிறது.

சூட்சும உடல் எனும்போது அது மனதை மையப்படுத்தியதாகும். குறிப்பாக மறைமனம், ஆழ்மனம், அதீத மனம், பிரபஞ்ச மனம் ஆகிய மனங்களை உள்ளடக்கியதாகும். இவைதான் மனித மனதில் முக்கியமான இயக்கக் கூறுகள். இவை சேர்ந்து ஒழுங்கான அமைப்பில் செயற்படும்போதே மனித மூளை ஆரோக்கியமான முறையில் இயங்கும். மூளை ஆரோக்கியமாக இயங்கும்போதே மனித உடல் சரியாக செயற்படும். எனவேதான் இஸ்லாமும் உள்ளத்துக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், 'மனித உடலில் ஒரு தசைப்பிண்டம் இருக்கிறது, அது சீர்பெற்றுவிட்டால் முழு உடலும் சீர்பெற்றுவிடும். அது சீர்கெட்டுவிட்டால் முழு உடலும் சீர்கெட்டுவிடும். அதுதான் மனித உள்ளமாகும் என்ற கருத்தைக் குறிப்பிட்டார்கள். அல்லாஹுத் தஆலாவும் மனிதனுடைய உடம்பையோ, வெளித் தோற்றத்தையோ கவனிப்பதில்லை. மனித உள்ளத்தையே கவனிக்கிறான். தவிரவும் அல்குர்ஆன்கூட நபியவர்களுக்கு உள்ளத்துக்கு இறக்கப்பட்டதாகவே இறைவன் குறிப்பிடுகிறான்.

எனவே இஸ்லாத்தின் பார்வையிலும் மனம்தான் முக்கியமானது. அதனுடைய வளர்ச்சியும், செழுமையும்தான் மனித வாழ்வையும் வெற்றிபெறச் செய்யக்கூடியது. எனவேதான் இன்றைய நவீனயுகத்திலும் Mind Science என்ற ஒரு கலை துரித வளர்ச்சியடைந்து வருவதைக் காணலாம். அதேநேரம் இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். இன்று உளவளத்துறை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து மட்டங்களுக்கும் தேவையானதாக இருக்கின்றது. ஏனெனில் ஒரு மனிதன் மோசமான சிந்தனை, பொறாமை, குரோதம், வெறுப்பு போன்ற மன உணர்வுகளுக்கு ஆட்படும்போது அவனுடைய மூளையில் அதிக அதிர்வுகள் ஏற்படுகிறன. மனித மூளையின் Beta, Alpha, Theta, Delta ஆகிய நான்கு நிலைகள் இருக்கின்றன. இவை கெட்ட எண்ணங்களின்போது மோசமான சிந்தனைகளின்போது அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மனித மூளையில் 3000 கோடி கலங்கள் இருக்கின்றன. இவ்வாறான மோசமான உள அதிர்வுகளின்போது அவை இறக்கின்றன. உடம்பில் இருக்கின்ற கலங்கள் இறந்தால் அவை மீண்டும் உயிர்பெறும் ஆனால் மூளைக் கலங்கள் இறந்தால் அவை மீண்டும் உயிர்பெற வாய்ப்பில்லை. எனவேதான் நவீன விஞ்ஞானத்தின் பின்னணியுடன் நோக்கினாலும் இஸ்லாம் உள்ளத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததற்கான காரணத்தை, யதார்த்தத்தை தெளிவாக உணரக்கூடியதாக இருக்கும்.

எங்கள் தேசம்: இஸ்லாமிய நோக்கில் உளவளத்துணையை எவ்வாறு நோக்கலாம்?

அகார் முஹம்மத்: இஸ்லாம் என்பதே உள்ளத்தை வளப்படுத்துவதுதான். அது மனித மனதுக்கு சாந்தி, சமாதானம், நிம்மதி என்பவற்றை ஏற்படுத்துவதற்காகவே இவ்வுலக மக்களுக்கு வழங்கப்பட்டது. ரஸூல் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களும், 'நான் மக்களுக்கு ஒரு போதகராகவே அனுப்பப்பட்டுள்ளேன்' என கூறினார்கள். அதாவது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் உலகிற்கு அனுப்பப்பட்ட முதலாவது கவுன்செலர் என்ற கருத்தை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்தி நிற்கிறது. அதேநேரம் அல்குர்ஆனில் நபியவர்கள் இச்சமூகத்திற்கு இறக்கப்பட்டதன் நோக்கத்தை குறிப்பிடும்போதும் அல்குர்ஆன், சுன்னா என்பவற்றைக் கற்றுக்கொடுப்பதற்கும், உள்ளத்தை வளப்படுத்துவதற்குமே (தஸ்கியதுன் நப்ஸ்) அனுப்பப்பட்டதாக இறைவன் குறிப்பிடுகிறான்.

இஸ்லாமிய வரலாற்றிலிருந்து இறைதூதருடைய வாழ்க்கையில் இடம்பெற்றதோர் உளவள ஆலோசனை நிகழ்வொன்றை சொல்வதாயின், ஹிராக் குகையிலிருந்த ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வஹி இறங்கியபோது, அச்சத்துடனும், பீதியுடனும் தூதரவர்கள் வீட்டையடைந்தார்கள். அப்போது நிலமையைப் புரிந்துகொண்ட கதீஜா நாயகி அவர்கள், இறைதூதருடன் பேசிய வார்த்தைகள், கூறிய ஆலோசனைகள் மற்றும் மேற்கொண்ட பணிகள் அனைத்தும் உளவள சிகிச்சைக்கான ஒரு அழகிய முன்மாதிரியாகும். எனவேதான் இஸ்லாமியப் பணியில் ஈடுபடுகின்ற அழைப்பாளன், கதீப், முரப்பி, ஆசிரியன் அனைவருமே தங்களுடைய பேச்சு, உரையாடல், சிரிப்பு, பார்வை என்பவற்றினூடாக இந்த கவுன்செலிங் பணியைச் செய்கின்றனர். ஏன் எமது சமூகத்திலிருந்து வருகின்ற பத்திரிகைகள்கூட இப்பணியைத்தான் செய்துவருகின்றன.

எங்கள் தேசம்: இஸ்லாமிய வரலாற்றில் உளவளத் துணைக்கும் சூபித்துவ சிந்தனைக்குமிடையே தொடர்புகள் உள்ளனவா?

அகார் முஹம்மத்:
 இஸ்லாத்தினதும் உடம்பினதும் மையம் உள்ளம் என்ற வகையில் ஆரம்பத்தில் எமது வரலாற்றிலும் பல அறிஞர்கள் இதற்கு தங்களாலான உரிய பங்களிப்புக்களை செய்திருக்கின்றார்கள். சூபித்துவ சிந்தனை எனும்போது அது மற்றொரு வகையில் உள்ளத்தை வளப்படுத்தும் உளவளத்துணையைத்தான் குறிப்பதாக அமைகிறது. எனவேதான் வரலாற்றில் நிறைய அறிஞர்கள் தங்களுடைய எழுத்து, பேச்சு போன்ற அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள். உளவளத்துணை சம்பந்தமான அடிப்படைத் தத்துவங்கள், கோட்பாடுகள் மற்றும் நடைமுறை செயற்திட்டங்கள் என்பன பற்றி பல்வேறு ஆய்வுகளும், தொகுப்புகளும் வந்திருக்கின்றன. ஹாரிஸ் அல் முஹாஸபி, ஸஹ்ல் அல் துஸ்தூரி, ஹகீமுத் திர்மிதி. ஆபூ ஹாமித் அல் கஸ்ஸாலி, அபூ தாலிப் அல் மக்கி, பிஸ்தாமி, குசைரி போன்றோர் முக்கியமானவர்கள். அதேநேரம் எமது தத்துவத்துறையில் ஈடுபட்ட இப்னு ஸீனா, இப்னு கையூம் போன்றவர்களின் பங்களிப்பும் முக்கியமானதாகும். முஹம்மது இப்னு சீரின், ஸஹரவர்தி போன்றவர்களும் இத்துறையில் ஞாபகப்படுத்தப்பட வேண்டியவர்களே.

இன்று 20ஆம் நூற்றாண்டில் உளவளத்துணையில், மனோதத்துவத்தில் முதன்மைமிக்கவர் என 'ப்ரொய்ட்' கருதப்படுகின்றார். எனினும் 10 நூற்றாண்டுகளுக்கு முன்பே ஹகீமுத் திர்மிதி போன்றோர் இது தொடர்பான பல்வேறு தத்துவங்கள், நடைமுறைகளை தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றனர். எனவேதான் இவர்களுடைய சிந்தனைகள், கோட்பாடுகள் என்பன இன்றைய உளவியல் துறையில் அதிகமாக மேற்கோள் காட்டப்படுகின்றன.

எங்கள் தேசம்: உளவளத்துணையில் பயிற்சி பெறுபவர் எவ்வாறான ஆலோசனைகளையும், அறிமுகங்களையும் பெற்றிருத்தல் வேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

அகார் முஹம்மத்: 
உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவள ஆலோசனை வழங்குவதென்பது தனிப்பட்ட அமைப்பாகவும், கூட்டமைப்பாகவும் இரண்டமைப்புகளில் மேற்கொள்ள முடியும். எனினும் மிக நெறிப்படுத்தலுடன் செய்ய வேண்டியதாகும். அந்த வகையில் பின்வரும் விடயங்கள் கவனத்திற் கொள்ளப்படுவது அவசியம்.

கேட்டல்: முதலாவது பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாகச் சென்று அவர்களுடைய பிரச்சினை, கஷ்டம் என்பவற்றை பூரணமாகக் கேட்க வேண்டும். அவர்களுக்கு அவர்களுடைய உள்ளங்களில் இருக்கின்ற கஷ்ட நிலைமைகளை கதைப்பதற்கான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும். கேட்கும்போது அவர்களுடைய மனதில் அவர்களுடைய விடயங்களை அக்கறையுடன் செவிமடுக்கிறோம் என்ற மனோநிலையை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

இவ்வாறு திறந்த மனதுடன் உரையாடும்போதே, பாதிக்கப்பட்டவருடைய பிரச்சினையை சரியான முறையில் இனங்கண்டுகொள்ள வேண்டும்.

உரையாடுதல்: அதன் பின்னராக நாம் அவர்களுடன் உரையாடுதல் வேண்டும். இவ்வுரையாடலில் முக்கியமாக நான்கு அம்சங்கள் கருத்திற் கொள்ளப்படுவது அவசியம்.

   1. இறை நம்பிக்கை: மனிதனுக்கு வருகின்ற அனைத்து துன்பங்களும், துயரங்களும் அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன என்ற கருத்தைக் கொடுக்க வேண்டும்.
   2. மறுமை பற்றிய நம்பிக்கையை ஞாபகப்படுத்த வேண்டும்.
   3. இறை நாட்டப்படியே அனைத்தும் நடக்கும் என்ற உண்மையை உணர்த்த வேண்டும்.
   4. வாழ்வு பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தைத் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும். (அதாவது மனிதன், வாழ்வு, பிரபஞ்சம் பற்றிய இஸ்லாமியப் பார்வை தெளிவானதாக இருத்தல் வேண்டும்.)

துஆ: அடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு சில துஆக்களை அவர்களின் தலையைப் பிடித்தோ அல்லது நெஞ்சைப் பிடித்தோ ஓதி ஊதுதல் வேண்டும். (ஆண்,பெண் வேறுபாட்டைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.)

ருகீ: அடுத்ததாக ருகீ என்று சொல்லக்கூடிய உள்ளத்துடன் பேசக்கூடிய ஒரு துஆ தொகுப்பு ஒலிப்பேழையில் (Cassette) இருக்கின்றது. இதனை அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குதல் வேண்டும். அதேநேரம் ஒலிப்பேழையை கேட்பதற்குரிய வசதிகளைச் செய்துகொடுத்தல் முக்கியமானது.

அத்தோடு அதிகமதிகமாக துஆக்களை கேட்குமாறு ஞாபகப்படுத்தல், இபாதத் விடயங்களில் விருப்பத்தை உண்டாக்குதல், நல்ல விடயங்களை வாசிப்பதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுத்தல், முடிந்தவரை கூட்டாக இருப்பதற்கான ஒழுங்குகளை செய்தல். இவைகளை படிமுறையாகச் செய்யும்போது உண்மையிலே சரியானதோர் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்பதே எனது நம்பிக்கை.

கேள்வி: பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கும் இதே அமைப்பில் உளவளப் பயிற்சிகளை வழங்குவது பொருத்தமாக அமையுமா?

அகார் முஹம்மத்: 
உண்மையில் கடந்த சுனாமி அனர்த்தத்தின்போது அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களான சிறுவர்களுடைய இயல்பு, முதிர்ச்சி, உளவியல் போக்கு என்பவற்றை பொறுத்தவரையில் மேற்சொன்ன பயிற்சிமுறை வெற்றியளிப்பது சாத்தியமல்ல. மாற்றமாக அவர்களை அவர்களுடைய இயல்புகளுக்கேற்ப அதிகமான விளையாட்டு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், சித்திரம் போன்ற போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களுடைய மனோநிலையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்தல் வேண்டும். குறிப்பாக அவர்கள் கூட்டாக இருப்பதற்கான வாய்ப்புக்களை அதிகரித்துக் கொடுத்தல் வேண்டும். இன்றைய நாட்களில் பாடசாலை செல்லக்கூடிய சிறுவர்களுக்கு அதற்குரிய உதவிகளையும் ஒத்தாசைகளையும் செய்வது உடனடித் தேவையாகும். தவறும்பட்சத்தில் அவர்களுடைய எதிர்காலம்பற்றிய நம்பிகையீனமும், தளர்வும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அத்தோடு முடிந்தவரை முகாமிலிருந்து இவர்களை மாற்றுவதற்குரிய ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொள்வது அவசியமாகும்.

எங்கள் தேசம்: பாதிக்கப்பட்ட மக்களுடைய உளவளத்தைக் கட்டியெழுப்புவதில் மீடியாக்கள் எவ்வாறான பங்களிப்புக்களைச் செய்தல் வேண்டும் என நீங்கள் கருதுகின்றீர்கள்?

அகார் முஹம்மத்:
 தென்னாசியப் பிரதேசத்தில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்திய இந்த சுனாமியைப் பொறுத்தவரையில் இதனை எதிர்கொள்வதற்கு, பெரும்பாலான நாடுகளுக்கு இதுபற்றிய முன்னனுபவமோ, அறிவோ இருக்கவில்லை. எனவேதான் இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தொடர்ந்தும் முகம்கொடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக எங்களுடைய நாட்டைப் பொறுத்தவரையில் வியாபார மயமாக இருக்கும் பெரும்பாலான மீடியாக்கள் இன்றுவரை தொடர்ந்தும் சுனாமி பற்றிய நிகழ்வுகளை காட்டி வருகிறார்கள். குறிப்பாக பல தனியார் தொலைக்காட்சிகள் சுனாமியின்போது ஏற்பட்ட கோரமான காட்சிகளை இன்றும் காட்சிப்படுத்தி வருகிறார்கள். உளவியல் பின்னணியுடன் நோக்கும்போது கண்டிக்கப்பட வேண்டியதாகும். காரணம் மக்களை முடிந்தவரை அவ்வணர்த்த சூழலில் இருந்து மீட்பதையும் இனிவரும் நாட்களில் நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்;லக்கூடிய செயற்திட்டங்களைப் பற்றியுமே அவர்களுடன் பேசுதல் வேண்டும். ஆனால் எமது மீடியாக்கள் இன்னும் அவற்றை காட்சிப்படுத்தி மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அத்தோடு பல்வேறு இடங்களில் சில மீடியாக்கள் வதந்திகளைப் பரப்பி மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தியதைக் காணலாம். தவிரவும் சில மீடியாக்கள் இனத்துவ ரீதியான போக்கிலேயே நடந்துகொண்ட அசிங்கங்களும் இல்லாமலில்லை. எனினும் இனிவரும் நாட்களிலாவது எமது நாட்டினதும், மக்களினதும் நலன்கருதி தூரநோக்குடன் இவர்கள் நடந்துகொள்வது உடனடித் தேவையாகும் என நான் கருதுகிறேன்.

எங்கள் தேசம்: உளவள ஆலோசனைகளில் ஈடுபட்டவர் என்ற வகையில் உங்களுடைய பணி, அனுபவங்களைப் பற்றி.?

அகார் முஹம்மத்:
 உண்மையில் சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து இன, மத பேதங்களைக் கடந்து பலரும் உணவு உடை போன்ற உடனடித் தேவைகளையே பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்தும் வழங்கிக்கொண்டும், அதற்குரிய முயற்சிகளைச் செய்துகொண்டும் இருந்தனர். இவை பாராட்டப்பட வேண்டியவை. அதற்கப்பால் இவ்வாறான உளவள ஆலோசனை தொடர்பான முயற்சிகளும் நடந்தன. எனினும் ஒப்பீட்டளவில் ஏனைய சமூகங்களுடன் வைத்துப் பார்த்தால் எமது சமூகம் இது தொடர்பான முயற்சிகள் போதியளவில் இடம்பெறவில்லை என்றே கூறவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் உளவள ஆலோசனை தொடர்பான பல செயற்திட்டங்களில் ஈடுபட வாய்ப்புக் கிடைத்தது. ஆரம்பமாக மாவனல்லை, கிண்ணியா, மருதமுனை, கல்முனை, ஹம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் பலருக்குப் பயிற்சி அளிப்பதிலும் மற்றும் முகாம்களில் பயிற்சி கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டோம். அதிலும் ஜனாதிபதி செயலகத்தினூடாக நடைபெற்ற உளவள ஆலோசனை தொடர்பான கருத்தரங்கொன்றையும் நடத்தினோம். அத்தோடு பல்வேறு துஆக்கள் உள்ளடங்கிய தொகுப்பொன்றும் சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதிலும் பாதிக்கப்பட்ட மக்களுடன் பேசுகின்ற ஒளிப்பேழையும் வெளியிடப்பட்டது. இவைகளை ஜமாஅத்தே இஸ்லாமி மீடியா பகுதியின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

எங்கள் தேசம்: இறுதியாக ஏதும் கூறுவதாயின்:

அகார் முஹம்மத்:
 சுனாமி அனர்த்தத்தினால் எல்லா வகையிலும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள்தான். அதேநேரம் அவர்கள் இன்றும் பல்வேறு புறக்கணிப்புக்களுக்கு உட்பட்டு வருகிறார்கள். குறிப்பாக பாதிக்கப்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் தங்களுடைய நிலங்களை இழக்க வேண்டிய பல்வேறு அழுத்தங்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர். இதற்கப்பால் இன்று உளவியல் ரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர். எனவே எங்களுடைய சமூக நலன் நிறுவனங்கள், இயக்கங்கள், அரசியல்வாதிகள் இது தொடர்பாக பொறுப்புணர்வுடனும் கலந்தாலோசனையுடனும் நடந்துகொள்வது அவசியமாக இருக்கிறது. இது கூட மக்களின் உளக் குமுறலை ஓரளவு தீர்த்து உளவளத்தைக் கட்டியெழுப்பும் பணியே என்றால் பிழையல்ல!

 


2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் தொடர்பாக கிண்ணியா ஜமாஅதே இஸ்லாமியினால் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அழிவு தரும் தெளிவு எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மத் அவர்கள் ஆற்றிய உரை...