பாகிஸ்தானுக்கு பயிற்சியளிக்க அக்ரமை அழைக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

15/06/2012 14:49

 

பாகிஸ்தானுக்கு பயிற்சியளிக்க அக்ரமை அழைக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
 
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும், வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரமை பாகிஸ்தானின் இளம் வீரர்களுக்காகப் பயிற்சியளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

பாகிஸ்தானின் கபாஃபி மைதானத்தில் இளைய வீரர்களுக்கான பயிற்சி முகாம் எதிர்வரும் 20ம் திகதி நடைபெற உள்ளது.

இங்குள்ள இளம் வீரர்களுக்கு அக்ரம் பயிற்சியளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரும், தற்போதைய பாகிஸ்தான் தேசியக் கிரிக்கெட் அகாடமியின் தலைவருமான இன்திகாப் அலாம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்திலாப் கூறுகையில், அக்ரம் தனது கடுமையான வேலைகளுக்கு மத்தியில் எங்களுக்கென நேரத்தை ஒதுக்கி, அவர் இந்த முகாமிற்கு வருகை தந்து பயிற்சியளிக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்.

அக்ரமின் திறமை மற்றும் அவரது அனுபவம் காரணமாக இளைய வீரர்கள் அவரிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்திய அக்ரம், அதன் பின்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அந்த நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியிருந்தார்.

ஆனாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்காகச் சேவையாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், அக்ரம் தற்போது முடிந்த ஐ.பி.எல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.