தேர்தலில் நின்றுபார்…

20/07/2012 11:21

 

தேர்தலில் நின்றுபார்…

 

-கவிச்சுடர் ரீ.எல்.ஜவ்பர்கான்-

உறவுகளை அடையாலப் படுத்துதற்கும்
உயிர்நண்பன் யாரென்றும் அறிந்துகொள்ள
திறவுகோலாய் வருகின்ற ஒன்றுதானே
தேர்தலெனும் சுயபரீட்சை களமேயாகும்…
பிறப்பு முதல் ஒன்றித்து வாழுகின்ற
பிரியாத நட்புகளும் ஒழிந்துகொள்ளும்
உரமாக நின்றபல உறவு தானும்
ஓரமென ஆகிவிடும் தேர்தல் கேட்டால்…

””’    ””   ””’     ””’

நியமனத்தை செய்வதற்கு முன்னர்வந்து
நிச்சயமாய் வெல்வாய்நீ என்றுவாழ்த்தி
இயன்றவரை உதவிகளை நானேசெய்வேன்..
இனியதமிழ் பிரசுரங்கள் அடித்தும் தாரேன்….
வயல்வெட்டை வழிகளுக்கும் வந்துநின்று
வடிவாக பிரச்சாரக் கூட்டம்போட்டு..
நயமுடனே உதவிடுவேன் என்று சொன்னோர்
நியமத்தை செய்தபின்னர் தொலைந்துபோவார்.

””’    ””’   ””’    ””’

சுவரொட்டி அச்சிடவே ஏற்றுக்கொண்டோர்…
சுயஇலக்க ‘காட்டடிக்க ஒத்துக்கொண்டோர்..
நவஉலகின் நாயகனாய் நாளைநீயே
நானிலத்தில் மிளிர்ந்திடுவாய் என்றும் சொல்லி
தவறான ஆசைகளை ஊட்டி இந்த
தரைதனிலே தேர்தலிலே இறக்கிவிட்டு..
அவமானம் தனைச்சுமக்கச் செய்தும்விட்டு
ஆள்மாறி விடுவார்கள் தேர்தல் கேளு…

”””     ”””    ”””    ””’

நித்தமுமே நம்மில்லம் வந்து நிற்போர்
நீண்டதின மாகநம்மில் உண்டுதீர்த்தோர்
எத்தiயோ உதவிகளைப் பெற்று இன்று
ஏணியென உயர்ந்தோர்கள் கடனைப்பெற்றோர்
மத்தளமாய் நமைமாற்றி பயனடைந்தோர்…
மருந்துக்கு  தானாலும் நம்மைநாடி
சத்தியமாய் வரமாட்டார்! முடியுமட்டும்
சாதி சனம் அறியவெனில் தேர்தல்கேளு…

””’      ”””’      ””’     ”’

தொலைபேசி எடுத்துநிதம் தொல்லை தந்து
தொடராக காரியங்கள் சாதித் தோர்கள்
வலைவீசி நம்முன்னால் உதவிபெற்று
வள்ளவென மாறியோரும் நமக்குமுன்னால்
நிலவுக்குத் திரைபோடும் மேகம் போல
நின்றிடுவார் தேர்தலது முடியுமட்டும்
சிலைவைப்பார் என்றுநிதம் நம்பிநின்றோர்
சில்லறையாய் காணத்து போவாரிங்கே..

””’    ”””     ””’

நன்றியினை தொலைத்திட்ட மனிதன்தன்னை
நானிலத்தில் தரிசிக்கும் பொழுது என்றால்
குன்றுஎன நம்முன்னே நிமிர்ந்துநிற்கும்
கூனல்மனம் படைத்தோரின் காலமென்பேன்…
பன்றியது என்றாலும் பரவாயில்லை
பாரினிலே அதைவிடவும் இவர்கள்மோசம்..
நன்றெனவே வாழ்ந்துவிட வேன்டுமென்றால்
நம்பிநிதம் இறங்கிடாதே உறவு நட்பை!