அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைத் தீர்மானங்களின் தெளிவு

15/06/2012 14:42

 

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்
பிறைத் தீர்மானங்களின் தெளிவு


2006.09.06 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமயகத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சார்பிலும், கொழும்பு பெரிய பள்ளிவாசல் சார்பிலும் ஒன்று கூடிய ஆலிம்கள் பிறை பார்த்தல் தொடர்பாக ஏகமனதாக மேற்கொண்ட தீர்மானங்கள் கடந்த வாரங்களில் தொடர்பூடகங்களுக்கூடாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டன. நாட்டின் பல பாகங்களில் அமைந்துள்ள மஸ்ஜித்களுக்கும் இத்தீர்மானங்கள் பற்றிய அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது. குறித்த தீர்மானங்களும், அவை பற்றிய அறிக்கைகளும் சுருக்கமாகவும், செறிவாகவும் அமைந்துள்ளமையினால் சிலருக்கு இத்தீர்மானங்களில் ஒன்றோ அல்லது பலவோ தெளிவற்றதாகவோ, மயக்கமாகவோ இருக்கலாம் என்பதனைக் கருத்திற் கொண்டு தீர்மானங்கள் பெறப்பட்ட பின்னணி குறித்து ஒரு விளக்கத்தை வழங்குவது பயனுள்ளதாக இருக்கும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமைபீடம் கருதியது. அந்த வகையில் எழுதப்பட்டதே இக்கட்டுரையாகும்.

நம் நாட்டில் ரமழான் தலைப்பிறையையும், இரு பெருநாட் பிறைகளையும் தீர்மானிக்கும் பொறுப்புவாய்ந்த சன்மார்க்கக் கடமையை கொழும்பு பெரிய பள்ளிவாயல் நிர்வாகம் ஆலிம்களின் துணையுடன் பல தசாப்தங்களாக  மேற்கொண்டுவந்துள்ளதை முழு முஸ்லிம் சமூகமும் நன்கு அறியும். காலப்போக்கில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் உத்தியோகபூர்வமாக இப்பணியில் இணைந்து கொண்டது. கடந்த இரு தசாப்தங்களாக கொழும்பு பெரிய பள்ளிவாயலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவும் சேர்ந்து பிறை தொடர்பான தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதில் முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து செயற்படுகின்றனர். முஸ்லிம் சமூகம் எல்லாக் காலங்களிலும் இவ்வமைப்பை பிறை தொடர்பான அதிகாரபூர்வ அமைப்பாக கருதி அதன் தீர்மானங்களை ஏற்று அதற்குக் கட்டுப்பட்டு செயல்பட்டு வந்துள்ளது.

பிறை பார்த்தல் தொடர்பாக குறித்த அமைப்புடன் உடன்படாத சில முஸ்லிம் சகோதரர்கள் இந்நாட்டில் தொடர்ந்து இருந்து வந்துள்ள போதும் அவர்களின் நிலைப்பாடு நாடளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமையவில்லை. ஆனால், அண்மைக் காலமாக பிறை பார்த்தல் தொடர்பாக எதிரும் புதிருமான நிலைப்பாடுகள் தோன்றி அவை வலுப்பெறும் நிலை அவதானிக்கப்படுகின்றது. பொதுமக்களும் இச்சர்ச்சைகள் காரணமாக பெருமளவில் குழப்பமடையும் நிலையும் அவதானிக்கப்படுகின்றது. இந்த சிறிய நாட்டில் சிறிய சமூகத்தில் கடந்த ஆண்டு ஈதுல் பித்ர் பெருநாள் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டமை யாவரும் அறிந்ததே.

இப்பின்னணியிலேயே பிறை தொடர்பான இச்சர்ச்சைக்கு இம்முறை எப்படியும் தீர்வுகளைப் பெறவேண்டும். நிலைப்பாடுகளை மிகச் சரியாக தீர்மானித்து நாட்டு மக்களுக்கு தெளிவாக அறிவித்துவிடல் வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தீர்மானித்தது. இது தொடர்பாக ஷரீஆ கண்ணோட்டத்தில் ஆழமானதோர் ஆய்வு மேற்கொள்வதற்காக ஒரு விசேட நிபுணத்துவக் குழுவும் நியமிக்கப்பட்டது. குறித்த குழு பல மாதங்கள் பிறை தொடர்பான சட்டப் பிரச்சினைகளை ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைபீடத்திற்கு சமர்ப்பித்தது. இதனை அடுத்து கடந்த 2006.09.06 இல் பிறை தொடர்பான இறுதித் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விசேட அமர்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைப்பணிமனையில் இடம் பெற்றது. இவ்வமவர்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பிலும், கொழும்பு பெரிய பள்ளிவாயல் சார்பிலும் முக்கியமான ஆலிம்கள் கலந்து கொண்டனர். அவ்வமர்வின் போது பிறை தொடர்பான எமது நிலைப்பாடுகளை எவ்வாறு அமைத்துக் கொள்ளல் வேண்டும் என்பது பற்றி ஷரீஆ கண்ணோட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. அதனைத் தொடர்ந்தே ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட குறித்த தீர்மானங்கள் பெறப்பட்டன.

பிறை பார்த்தல் தொடர்பான மார்க்கப் பிரச்சினைகளில் 'இக்திலாஃபுல் மதாலிஃ' எனும் பிறை பிறக்கும் பிராந்திய வேறுபாடு தொடர்பான பிரச்சினை முதன்மை பெறுகின்றது. பிறை பிறத்தலில் பிராந்திய வேறுபாடு உண்டு என்பதே எமது நிலைப்பாடாகும். காலாகாலமாக இலங்கை முஸ்லிம் சமூகம் இந்நிலைப்பாட்டில் நின்றே பிறை தொடர்பான முடிவுகளைப் பெற்று வந்துள்ளது. இந்நிலைப்பாட்டுக்கு பின்வரும் குரைப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஹதீஸ் பிரதான ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது.

முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சிரியாவில் இருந்த வேளை உம்முல் ஃபழ்ல் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் என்னை சிரியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். சிரியாவுக்குப் போய் அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டேன். நான் சிரியாவில் இருந்த வேளையில் ரமழான் பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக் கிழமை இரவு நான் தலைப்பிறையைக் கண்டேன். அம்மாதத்தின் இறுதியில் நான் மீண்டும் மதீனா வந்தேன். என்னிடம் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் பிறை விடயத்தைப் பற்றி ஞாபகப் படுத்தி விட்டு, நீங்கள் எப்போது பிறை கண்டீர்கள்? என்று கேட்டார்கள். வெள்ளிக் கிழமை இரவு என்று சொன்னேன். அப்போது நீங்கள் பிறையைக் கண்டீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு, ஆம் நானும் கண்டேன், மக்களும் கண்டனர், மக்களும் நோன்பிருந்தனர், முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களும் நோன்பிருந்தார்கள்; என்றேன். அதற்கு அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் நாங்கள் சனிக் கிழமை இரவே பிறையைக் கண்டோம். மாதத்தை முப்பது நாட்களாக்கும் வரை அல்லது தலைப்பிறையைக் காணும் வரை தொடர்ந்து நோன்பிருப்போம்' என்றார்கள். அதற்கு நான், முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பிறையைக் கண்டதும், நோன்பிருந்ததும் உங்களுக்குப் போதுமானதாகாதா? என்று கேட்டேன். இல்லை, இவ்வாறுதான் நாங்கள் ஏவப்பட்டுள்ளோம் என்று கூறினார்கள்.
(ஸஹீஹு முஸ்லிம் : பாடம் : ஒவ்வொரு பிரதேச மக்களும் பிறை காண்பதன் விளக்கம்)

ஷாபிஈ மத்ஹபின் பொதுவான நிலைப்பாடு இதுவாகும். ஹனபி மத்ஹபைச் சார்ந்தோரும் இந்நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர். நவீன கால அறிஞர்களிலும் பலர் இக்கருத்துக்கு சார்பாகவுள்ளனர். சர்வதேச பிறையை அடிப்படையாகக் கொண்டு தலைப்பிறையை தீர்மானிப்பது வானியல், புவியியல் நோக்கிலும் பொருத்தமான நிலைப்பாடல்ல என்பதை இப்போது வானியல் அறிஞர்கள் நிரூபித்துள்ளனர். இது தொடர்பான ஒரு விளக்கக் கட்டுரையை சகோதரர் எம்.எம்.இப்லால் B.A (Hons)அவர்கள் கடந்த 2006.09.15 தினகரனில் சந்திர மாத கணிப்பீடு பற்றிய ஒரு புவியியல் நோக்கு எனும் தலைப்பில் எழுதியிருந்தார் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

இப்பின்னணியிலேயே எமது முதலாவது தீர்மானம் பின்வருமாறு அமைந்தது:

உள்நாட்டில் வெற்றுக்கண்களுக்கு பிறை தென்படுவதை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமிய மாதம் தொடர்பான அனைத்து முடிவுகளும் பெறப்படும்.

தலைப் பிறையை தீர்மானிப்பதுடன் தொடர்பான மற்றுமொரு முக்கிய பிரச்சினை பார்க்கும் முறை பற்றியதாகும்.

தலைப் பிறையை பூமியிலிருந்து வெற்றுக்கண்களால் பார்க்க வேண்டும் என்பது ஒரு நிலைப்பாடாகும். பிறையைக் கண்டு நோன்பு நோற்கவும். பிறையைக் கண்டு நோன்பு வைப்;;பதை நிறுத்தவும் என்ற பிரபல்யமான, நம்பகமான ஹதீஸ் இக்கருத்துக்கு முக்கிய சான்றாதாரமாக விளங்குகின்றது.

முழு ரமழானிலும் நோன்பு நோற்றல் வேண்டும் ரமழானின் ஒரு நாளேனும் விடுபடலாகாது. ரமழானின் ஒரு நோன்பு, ஷஃபானிலோ அல்லது ஷவ்வாலிலோ நோக்கப்படவும் கூடாது. இது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பதே நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

தலைப்பிறை பார்ப்பது தொடர்பிலான இன்னுமொரு முக்கிய தீர்மானம் பின்வருமாறு அமைகின்றது:

     ஒரு நாளில் பிறை வெற்றுக் கண்ணுக்குப் புலப்படுவது சாத்தியமற்றது என நம்பகமான முஸ்லிமான வானியல் அறிஞர்கள் உறுதி செய்யுமிடத்து வானியல் அவதானத்தின் அடிப்படையிலான அந்நிலைப்பாடு ஏற்றக்கொள்ளப்படுவதோடு அவ்வடிப்படையில் அன்றைய தினம் பிறை காணமுடியாத நாளாகக் கொள்ளப்படும்.

 நபிகளார் காலத்தில் வெற்றுக் கண்களால் பிறை பார்த்து, மாதங்களைத் தீர்மானிக்கும் முறையே வழக்கில் இருந்ததாக ஹதீஸ்கள் மூலம் அறியக் கிடைக்கின்றது. மாதக் கணிப்பீடு செய்யும் முறை அக்காலத்தில் இருக்கவில்லை என்பது பின்வரும் ஹதீஸ் மூலம் நிரூபனமாகிறது:

நிச்சயமாக நாம் எழுத்தறிவற்ற ஒரு சமூகமாவோம். நாம் எழுதுவதும் இல்லை, மேலும் கணக்குப் பார்ப்பதும் இல்லை. மாதம் என்பது இவ்வாறு, இவ்வாறு, இவ்வாறு என இரு தடவைகள் இரு கைகளினதும் விரல்களை விரித்தும், மூன்றாவது தடவையில் பெருவிரல் தவிர்ந்த ஏனைய விரல்களை விரித்தும் காட்டினார்கள். பின்னர் மாதம் என்பது இவ்வாறு, இவ்வாறு, இவ்வாறு என இரு கைகளின் அனைத்து விரல்களையும் விரித்து மூன்று தடவைகள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டினார்கள். அதாவது: முப்பது நாட்கள் பூரணமடைதலாகும் என்று அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(ஸஹீஹு முஸ்லிம் : பாடம் : தலைப்பிறை கண்டு ரமழான் நோன்பு கடமையாதல்)

தலைப்பிறையைக் காணமுடியாதவாறு முகிழ் மூட்டம் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு வழிகாட்டலைத் தந்துள்ளார்கள். அதாவது, 'ஸஃபானை முப்பது நாட்களாக பூரணப்படுத்துங்கள்' என்பதாகும்.

ஒரு குறிப்பிட்ட நாளில் பிறை வெற்றுக் கண்களுக்குப் புலப்படுவது சாத்தியமற்றது என வானியல் கணிப்பீடுகள் உறுதி செய்யுமிடத்து கண்களால் பார்த்தவர்களின் சாட்சியம்  நிராகரிக்கப்படும் என்பது இமாம் தகிய்யுத்தீன் அஸ்ஸுப்கி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் தீர்ப்பாகும். வானியல் கணிப்பீடு என்பது உறுதியானது (கண்களால் பார்த்ததாகக் கூறும்) சாட்சியம் உறுதியற்றது உறுதியான ஒரு நிலைப்பாட்டுடன் உறுதியற்ற ஒரு நிலைப்பாடு முரண்பட முடியாது. என்கிறார் இமாம் ஸுப்கி (ரஹிமஹுல்லாஹ்).

குறைந்த பட்சம் பிறை கண்டதாக வரும் செய்தியை சரி காண்பதற்கு வானியலின் துணை நாடப்படலாம். இதன் பயனாக தப்பான நாளில் புதிய மாதம் ஆரம்பிக்கப்படுவது தவிர்க்கப்பட முடியும் என சில அறிஞர்கள் கருதுகின்றனர். தற்காலத்தில் இக்கருத்தை பல ஆலிம்கள் ஆதரிக்கின்றனர். மிகவும் பொருத்தமானதும், நடுநிலையாதனதுமான கருத்தாக இது கொள்ளப்படுகின்றது. புகழ்பூத்த இஸ்லாமிய சட்டத்துறை அறிஞரான இப்னு ஹஜர் அல்ஹைதமீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் கருத்தும் இதுவாகும்.

அதவாது, தலைப்பிறையைத் தான் கண்டதான ஒரு முஸ்லிமுடைய அறிவித்தல் விஞ்ஞானத்தின் எதிர்வு கூறலுக்கு முரண்பாடாக அமைந்தால் அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஆயினும் விஞ்ஞானத்தின் எதிர்வு கூறல் இருந்த போதும் எவராலும் தலைப்பிறை வெற்றுக்கண்களால் காணப்படவில்லையாயின் அவ்வாறு அது கருதப்பட்டு நடப்பு மாதம் 30 நாட்களாக பூரணப்படத்தப்படும்.

வானியல் கணிப்பீடுகளை நம்பகமான முஸ்லிம் வானியல் அறிஞர்கள் உறுதி செய்தல் வேண்டும் என்பது எமது தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள ஒரு விடயமாகும். பொதுவாக வானியல் அறிஞர்கள் எவரும் கணிப்பீடுகளை வெளியிடலாம். அவை நம்பகமான, முஸ்லிம் வானியல் அறிஞர்களால் உறுதி செய்யப்படல் வேண்டும் என்பதையே தீர்மானம் கூறுகின்றது. வானியல் கணிப்பீடுகள் இஸ்லாமிய மாதங்களைத் தீர்மானிப்பதற்கும், இபாதத்களை நிறைவேற்றுவதற்குமான காலங்களை தீர்மானிப்பதற்கும் உதவியாகக் கொள்ளப்படுவதால் பிறைபார்த்தல் தொடர்பான சாட்சியம் சொல்வோர் முஸ்லிம்களாகவும், நம்பகமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்பது போலவே வானியல் கணிப்பீடுகளை உறுதி செய்யும் வானியல் அறிஞர்களும் முஸ்லிம்களாகவும், நம்பகமானவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

இன்று சர்வதேச மட்டத்திலும், உள்நாட்டு மட்டத்திலும் நம்பகமான முஸ்லிம் வானியல் அறிஞர்கள் இருக்கின்றார்கள் என்பதனையும் நாம் தெரிந்திருத்தல் வேண்டும்.

எமது ஐந்தாம் தீர்மானம் பின்வருமாறு அமைந்துள்ளது:

     பிறை வெற்றுக் கண்களுக்குத் தென்படுவது அசாத்தியமானது என முடிவு செய்யப்பட்ட நாளில் ஒருவரோ அல்லது பலரோ பிறை கண்டதாகக் கருதினால் அவரோ அல்லது அவர்களோ தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படல் என்ற வகையிலும், முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செல்லல் என்ற வகையிலும் குறித்த நாளில் நோன்பு நோற்பதற்கோ பெருநாள் கொண்டாடுவதற்கோ பிறரைத் தூண்டவோ, பிரகடனப்படுத்தவோ கூடாது. தனிப்பட்ட முறையில் அவரோ அல்லது அவர்களோ தான் அல்லது தாம் கண்டதாகக் கருதும் பிறையின் அடிப்படையில் செயற்படும் அனுமதியைப் பெறுவர்.
 

இந்த முடிவும் எமது சுய ஆய்வின் அடிப்படையில் பிறந்த ஒன்றல்ல. இது எமது ஆரம்ப கால அறிஞர்கள், இமாம்கள் குர்ஆன், ஸுன்னாவின் ஒளியில் வெளியிட்டுள்ள கருத்தாகும்.

தலைப்பிறை கண்ட அறிவித்தலின் அடிப்படையில் புதிய மாதம் ஆரம்பித்ததாகப் பிரகடனம் செய்யும் அதிகாரம் தலைமைத்துவத்திற்கு மட்டுமே உண்டு. தலைமைத்துவம் எனும் போது அது அடிப்படையில் கிலாஃபத்தைக் குறிக்கும். கலீஃபாவோ அவர் சார்பில் இதற்காக நியமனம் பெற்ற அதிகாரியோ பிறைப் பற்றிய பிரகடனத்தைச் செய்ய வேண்டும். இன்று கிலாஃபத் இல்லாததனால் இப்பொறுப்பு அவ்வந்த அரசுகளைச் சாரும். இலங்கை போன்ற முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் நாடுகளில் அந்த நாடுகளின் முஸ்லிம்களின் அங்கீகாரம் பெற்ற ஒரு சபையிடம் இப்பொறுப்பு வழங்கப்படல் வேண்டும் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும். இந்த வகையில் இலங்கையில் பிறை தொடர்பான தீர்மானம் எடுக்கும் அதிகாரமுடைய சபையாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாயல், முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ஆகியவை இணைந்த அமைப்பு காணப்படுகின்றது. எனவே, இவ்வமைப்பு பிறையை உறுதிப்படுத்தாத நிலையில் தனிப்பட்ட முறையில் ஒருவரோ அல்லது சிலரோ தாம் பிறை கண்டதாக நம்பினால் அவரது அல்லது அவர்களது நிலைப்பாடு எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றியே ஐந்தாம் தீர்மானம் பேசுகின்றது.

இமாம்களின் கருத்துப்படி அவர்கள் தனிப்பட்ட முறையில் ரகசியமாக நோன்பு நோற்கலாம். பெருநாளையும் கொண்டாடலாம்.

இது வரை குறிப்பிடப்பட்ட இச்சுருக்கமான விடயங்களுக்கூடாக பிறைப் பார்த்தல் தொடர்பான தீர்மானங்களின் உண்மைத்தன்மையையும், பின்புலத்தையும் புரிந்து கொள்ள முடியும் என நம்புகின்றோம்.

ஏலவே, நீண்ட காலமாக குறித்த நிலைப்பாடுகளில் நின்றே பிறை தொடர்பான முடிவுகள் பெரும்பாலும் பெறப்பட்டு வந்துள்ளன என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். இந்நிலைப்பாடுகளை மீளாய்வு செய்து தெளிவாக, முடிவாக, எழுத்தில் தீர்மானங்களாக, அனைவருக்கும் அறியும் விதத்தில் தரும் முயற்சியாகவே கடந்த 2006.09.06 ஆம் திகதி தீர்மானங்கள் அமைந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அல்லாஹ்வே யாவற்றையும் நன்கு அறிந்தவன்.