கடவுச்சீட்டுக்கள் தொலைந்தாலோ களவாடப்பட்டாலோ கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்!

31/07/2012 10:34

 

கடவுச்சீட்டுக்கள் தொலைந்தாலோ களவாடப்பட்டாலோ கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்!
 

கடவுச்சீட்டுகள் களவாடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ உடனடியாக உள்ளுர் காவல் நிலையத்துடன் தொடர்பு கொண்டு அறிவித்து முறைப்பாடடு அறிக்கை ஒன்றைப் பெறவேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. 

கடவுச்சீட்டுகள் களவாடப்படும் போதோ அல்லது தொலையும் போதோ, அதன் உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 

திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அறிக்கைக்கு அமைய நாளை மறுதினம் தொடக்கம் புதிய நடைமுறைகள் அமுல்படுத்தப்படுவதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. 

இலங்கையில் உள்ள ஒருவரின் கடவுச் சீட்டு தவறும் பட்சத்தில் உடனடியாக உள்ளுர் காவல் நிலையத்துடன் தொடர்பு கொண்டு அறிவிப்பதுடன் காவல்துறையினரிடமிருந்து முறைப்பாட்டு அறிக்கையொன்றினையும் பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொலைபேசியிலான முறைப்பாடுகளை வேலை நாட்களில் காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 வரையில் 011 532 9501 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர். 

முறைப்பாடு கிடைக்கப் பெறும் காவல்நிலையம் உடனடியாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிவிக்கும். இதற்கமைய திணைக்களம் தவறிய கடவுச் சீட்டினை ரத்துச் செய்வதன் மூலம் அதனை எவரினாலும். சட்டவிரோதமாக பாவனைக்கு உட்படுத்தப்படுவதிலிருந்து தடுக்கப்படும். 

இதுதவிர, இவை தொடர்பான முறைப்பாடுகள் இன்டர்போல் காவல்துறையின் ஊடாக சர்வதேச நாடுகளுக்கும் அறிவிக்கப்படும். 

இதுபோலவே, வெளிநாடுகளில் தமது கடவுச் சீட்டுக்களை இழக்கும் இலங்கையர்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய முறைகள் குறித்தும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.